

புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு-வைச் சேர்ந்த 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
போராட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பன்னீ்ரசெல்வம், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘பொதுத்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கை கைவிட வேண்டும். புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஏழை தொழிலாளர்களுக்கு ரூ7,500 மற்றும் மாதம் ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.
பின்னர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர்.
இதுபோல் பள்ளிபாளை யத்தில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் நேற்று தருமபுரியில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. தருமபுரி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடந்த இந்தப் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட தலைவர் ஜீவா தலைமை வகித்தார். போராட்டத்தில், மாநில செயலாளர் சி.நாகராசன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜி.நாகராஜன், முரளி, கலாவதி, அங்கம்மாள், சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டதால் 150 பேரை தருமபுரி நகர காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.