

சேலம் மாவட்டத்தில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொஙகல் பரிசுத் தொகுப்பு மற்றும் 18.96 லட்சம் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் பணி தொடங்கியது.
அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நேற்று சேலம் பள்ளப்பட்டி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ வெங்கடாசலம், சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ராமன் தலைமை வகித்து, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜேந்திர பிரசாத் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், கோட்டாட்சியர் மாறன், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல மாவட்டம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
ஈரோடு, நாமக்கல்லில் விநியோகம்
பவானியில் நடந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். அதிகாரிகள் கூறும்போது, டோக்கன் பெறாதவர்கள் 13-ம் தேதி ரேஷன்கடைகளுக்குச் சென்று நேரடியாக பொங்கல்பரிசினைப் பெற்றுக் கொள்ளலாம், என்றனர்.