திண்டுக்கல் மாவட்டத்தில் பண்ணைக் கருவிகள் வாங்க ரூ.3.85 கோடி நிதி

திண்டுக்கல் மாவட்டத்தில்   பண்ணைக் கருவிகள்  வாங்க ரூ.3.85 கோடி நிதி
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்குப் பண்ணைக் கருவிகள் வாங்க ரூ.3.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2017-18 நிதியாண்டு முதல் விவசாயிகள் பயன் பெறுவதற்காகக் கூட்டுப் பண்ணையத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் வேளாண் துறை சார்பில் 144 உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள், தோட்டக்கலைத் துறை சார்பில் 87 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் என மொத்தம் 231 குழுக்கள் தொடங்கப்பட்டன. இந்தக் குழுக்களுக்குப் பண்ணைக் கருவிகள் வழங்குவதற்காக தலா ரூ.5 லட்சம் வீதம் இதுவரை ரூ.10.10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 23,100 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இதையடுத்து நடப்பு ஆண்டில் வேளாண் துறை சார்பில் 47 குழுக்கள், தோட்டக்கலைத் துறை சார்பில் 30 குழுக்கள் என மொத்தம் 77 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3.85 கோடி நிதி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 7,700 விவசாயிகள் பயன்பெறுவர்.

உழவர் குழுக்கள் பண்ணைக் கருவிகள் வாங்க நிதி வழங்குவதையடுத்து பண்ணைக் கருவிகள் தொடர்பான கண்காட்சி மற்றும் பண்ணைக் கருவி நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பாண்டித்துரை, துணை இயக்குநர் விஜயராணி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in