

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு கரோனா தடுப்பூசிகளை இருப்பு வைக்க வசதியாக சேலத்துக்கு வந்த 80 குளிர்பதனப் பெட்டிகள், அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
கரோனா தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வசதியாக, தடுப்பூசி போடும் பணிக்கான ஒத்திகையை இரு தினங்களுக்கு முன்னர் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டன. தடுப்பூசியை முதல்கட்டமாக, முன் களப்பணியாளர்களுக்கு போடும் வகையில், அந்தந்த மாவட்ட அளவில் பட்டியல்களும் தயாரிக்கப் பட்டுள்ளன. இந்நிலையில், தடுப்பூசிகளை அந்தந்த மாவட்டங்களுக்கு கொண்டு வந்தவுடன், அவற்றை இருப்பு வைத்து பயன்படுத்த வசதியாக, குளிர்பதனப் பெட்டிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. கோவை சுகாதார மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு கரோனாதடுப்பூசிகளை இருப்பு வைத்து, பயன்படுத்த வசதியாக கோவையில் இருந்து சேலத்துக்கு குளிர்பதனப் பெட்டிகள் நேற்று கொண்டு வரப்பட்டன.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலக கிடங்குக்கு கொண்டு வரப்பட்ட 80 குளிர்பதனப் பெட்டிகளை சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார் கூறியதாவது:
சேலம் சுகாதார மாவட்டத்துக்கு 24 பெட்டிகள், ஆத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு 9 பெட்டிகள் என 33 குளிர்பதன பெட்டிகள் வந்துள்ளன. இப்பெட்டிகள் ஒவ்வொன்றும் தலா 25 ஆயிரம் கரோனா தடுப்பூசிகளை சேமிக்கும் வசதி கொண்டவை. இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 8,25,000 கரோனா தடுப்பூசிகளை இருப்பு வைத்து பயன்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.