

வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 48 மையங்களில் நேற்று நடைபெற்ற குரூப்-1 தேர்வில் 7,248 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், துணை ஆட்சியர், டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், மாவட்ட தீயணைப்பு அலுவலர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட 66 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வு நேற்று நடை பெற்றது.
வேலூர் மாவட்டத்தில் 31 மையங் களில் இத்தேர்வுகள் நேற்று நடைபெற்றன. குரூப்-1 தேர்வு எழுத ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 8,911 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், 4,304 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 4,607 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பகல் 1 மணி வரை நடைபெற்றது. இதற்காக காலை 9.15 மணிக்குள்ளாக தேர்வு மையத் துக்குள் தேர்வர்கள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதேபோல, தேர்வு முடிந்து பகல் 1.15 மணி வரை யாரும் வெளியே அனுமதிக்கப்படவில்லை. குரூப்-1 முதல் நிலை தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டி ருந்தன.
சமூக இடைவெளி
31 தேர்வு மையங்களுக்கும் காவல் துறை பாதுகாப்பு அளிக்கப் பட்டிருந்தது. அதேபோல, தடை யில்லா மின்சாரம், குடிநீர், பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்து அடிப் படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டன.
தேர்வு மையங்களில் பறக்கும்படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், முதன்மை கண்காணிப் பாளர்கள், நடமாடும் குழுவினர் ஆகியோர் கண்காணித்தனர். தேர்வு மற்றும் கண்காணிப்பு பணிகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. வேலூர் ஓட்டேரியில் உள்ள அரசு முத்துரங்கம் கலைக்கல்லூரியில் நடைபெற்ற குரூப்-1 தேர்வை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
தேர்வுப் பணியை 17 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் மூன்று நடமாடும் குழுவினர் கண்காணித்தனர். மேலும், தேர்வு அறைகள் மற்றும் ஆய்வு பணி ஆகியவை வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. திருவண்ணா மலை நகராட்சி மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.