

சேலம் மாவட்டத்தில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி இருப்பதால், அவற்றை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:
நடப்பாண்டு பெய்த பருவ மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. காலி நிலங்களாக இருந்த இடங்களில் புல், பூண்டுகள் அதிகரித்தும், ஆங்காங்கே குட்டைபோல நீர் தேங்கியும் காணப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் நீடித்து வரும் நிலையில், கடந்த ஆண்டுகளைப்போல, டெங்கு மற்றும் சிக்குன் குனியா ஆபத்தும் நிலவுவதாக மாவட்ட சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில், கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து வருவது, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி, உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் தீவிர கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.