வயல்வெளி தினவிழா புதிய நெல் ரகங்களான ஆடுதுறை 53, கோ 51 குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

வயல்வெளி தினவிழா  புதிய நெல் ரகங்களான ஆடுதுறை 53,  கோ 51 குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
Updated on
1 min read

கரூர் மாவட்டம் புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக வயல்வெளி தினவிழா கொசூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

“கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிபிடி 5204 என்கிற ஆந்திரா பொன்னி நெல் ரகத்தை விவசாயிகள் அதிகமாக பயிரிட்டு வந்தனர். இந்த ரகத்தில் அனைத்து விதமான நோய் மற்றும் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்து வந்தது. இதனால் சாகுபடி செலவு அதிகரித்ததுடன், குறைவான மகசூலே கிடைத்தது. மேலும், அதிகளவில் ரசாயன உரங்கள், பூச்சி, பூஞ்சானக் கொல்லி மருந்துகள் தெளிக்க வேண்டிய நிலை உருவானது.

இதை கருத்தில் கொண்டு புழுதேரி வேளாண் அறிவியல் மையம் மூலம் விவசாயிகளிடையே கிராமவாரியாக ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. விவசாயிகளின் கருத்தின் அடிப்படையில் மாற்று ஏற்பாடாக புதிய நெல் ரகமான ஆடுதுறை 53, கோ 51 என்கிற 110 முதல் 120 நாட்கள் வயது உடைய இரு நெல் ரகங்களை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் வெளி யிட்டு உள்ளது” என தொழில்நுட்ப வல்லுநர்கள் திருமுருகன், தமிழ்ச் செல்வி ஆகியோர் தெரிவித்தனர்.

தொடர்ந்து, தோகைமலை அருகே உள்ள கொசூர் பகுதியில் பயிரிடப்பட்ட புதிய ரக நெல்லை மற்ற ரக நெல்லுடன் ஆய்வு செய்து அவற்றை ஒப்பிட்டு காட்டினர்.

மேலும், ஆடுதுறை 53, கோ 51 ரகமானது 110- 120 நாட்களில் வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு வரும். இவை இலை சுருட்டுப் புழு, தண்டு துளைப்பான இலை, புள்ளி பாக்டீரியா, இலை கருகல் நோய்கள், குலை நோயை தாங்கி வளரக்கூடிய தன்மை உடையவை. இவை சராசரியாக ஒரு ஏக்கருக்கு 3,000 கிலோ மகசூல் தரக்கூடியது எனவும் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து, வயல் களில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நிலையில் உள்ள ஆடுதுறை 53, கோ 51 ஆகியவற் றின் மகசூல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ஒரு சதுர மீட்டருக்கு 18 குத்துகளும், ஒரு குத்துக்கு 32 தூர்களும், ஒரு தூரில் 210 நெல் மணிகளும் இருந்தது கணக்கிடப்பட்டது.

இதில் மற்ற ரகத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது நன்கு வளர்ச்சி அடைந்து அதிகமான தூர்களின் எண்ணிக்கையோடு, குறைந்த அளவு உரங்கள் பயன்பாடு, பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் மிக மிக குறைவாகவே உள்ளது என்றும், மேலும் நெல்லில் வரக்கூடிய குலைநோய் தாக்குதல் அறிகுறி தென்படவில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in