சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு 18 லட்சம் டோஸ் போலியோ சொட்டு மருந்து விநியோகம்

சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு 18 லட்சம் டோஸ் போலியோ சொட்டு மருந்து விநியோகம்
Updated on
1 min read

சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களுக்கு சேலத்தில் இருந்து 18 லட்சம் டோஸ் போலியோ சொட்டு மருந்துகள் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு ஜனவரி மாதம் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமுக்கு தேவையான போலியோ சொட்டு மருந்துகளை தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை சார்பில் மண்டல வாரியாக அனுப்பப்பட்டு வருகிறது.

மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்குத் தேவையான 18 லட்சம் டோஸ் சொட்டு மருந்து சேலம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலக கிடங்குக்கு ஏற்கெனவே அனுப்பப் பட்டிருந்தது.

தற்போது, சேலத்தில் இருந்து கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் போலியோ சொட்டு மருந்துகள் அனுப்பப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் குளிரூட்டப்பட்ட வாகனங்களில் மருந்துகளை பெற்றுச் செல்கின்றனர். சேலம் மாவட்டத்துக்கு 4 லட்சம் டோஸ் மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “சேலம் மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்துக்கு 63 ஆயிரம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இதற்கென அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் என 2,698 இடங்களிலும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகள் உள்ளிட்ட 77 இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

மேலும், ஏற்காடு மற்றும் கருமந்துறை மலைப்பகுதியில் 2 இடங்களில் நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட உள்ளன” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in