

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மக்களவை உறுப்பினர் சு.திரு நாவுக்கரசர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் 136-வது தொடக்க விழாவையொட்டி புதுக்கோட்டை காந்தி பூங்காவில் உள்ள காந்தியின் சிலைக்கு நேற்று மாலை அணிவித்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
அதிமுக தலைமையிலான கூட்டணி என்று கூறிவிட்டு, முதல் வர் வேட்பாளரை தாங்கள் தான் அறிவிப்போம் என்று பாஜக கூறுவது ஜனநாயக முரண். எம்ஜிஆர், ஜெயலலிதா இருந் திருந்தால் இதுபோன்ற கருத்தை பாஜகவினர் கூற முடியுமா?. பலவீனமான தலைமையாலும், அமைச்சர்களின் முறைகேடுகளா லும் அதிமுகவினரை பாஜக மிரட்டி வருகிறது.
இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைக்கிறார்கள் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி யுள்ளார். அது யார் என்பதை அவர் தெளிவுபடுத்தவேண்டும்.
திருவள்ளுவர் மீது மத சாயம் பூசுவது கண்டனத்துக்கு உரியது. ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அவர் உடல் நலத்துடன் வந்த பிறகு அரசியல் கட்சி தொடங்குவது, தொடங்காதது குறித்து அவரே அறிவிக்கட்டும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.