

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஏஐடியுசி சங்கத்தினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குநர்கள், துப்புரவு பணியாளர்கள், தொழி லாளர்கள் என அனைவருக்கும் நடைமுறையில் உள்ள ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். பணியின்போது உயிரிழந்த பணியாளர்களுக்கு தமிழக அரசு கருணைத் தொகை வழங்க வேண்டும். அவர்களது வாரிசுதாரர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சந்திரசேகர ஆசாத், ஏஐடியுசி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேளன மாவட்டத் தலைவர் சாந்தகுமார், துணைத் தலைவர் குணசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.