

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங் களுக்கான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் வழங்கத் தடை கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ஏ.கே.முகமது அப்பாஸ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க ரூ.616 கோடி செலவில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் 3 மாவட்டங்களிலும் 5 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், ஊரகப் பகுதிகளில் உள்ள மக்கள் பயன் பெறுகின்றனர்.
இத்திட்டத்துக்காக காவிரி ஆற்றில் தினமும் 70 எம்எல்டி தண்ணீர் எடுக்கப்படுகிறது. திட்டம் தொடர்பான அரசாணையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து வர்த்தக ரீதியில் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படவில்லை.
இதை மீறி விராலிமலை தாலுகாவில் செயல்படும் ஐடிசி உட்பட 3 நிறுவனங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் விராலிமலை பூருவாய் கூட்டுக் குடிநீர்திட்டத்தின் பிர தானக் குழாயில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
முரணான தகவல்
எனவே காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து வர்த்தக ரீதியில் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்குத் தண்ணீர் வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர்.
மனுதாரர் சார்பில் வழக் கறிஞர் கே.கெவின்கரன் வாதிடு கையில், புதுக்கோட்டை மாவட் டம் முழுவதும் தினமும் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வழங்கப்படுகிறது. ஆனால் 3 நிறுவனங்களுக்கும் தலா 10 லட்சம் லிட்டர் வீதம் தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது என்றார்.
இதையடுத்து மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.