

அரசு உத்தரவை மீறி விருது நகரில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு நேற்று சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. அப்பள்ளியில் கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி எச்சரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கவும், சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், விருதுநகரில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணிக்கு தக வல் கிடைத்தது. இதை யடுத்து மாவட்டக் கல்வி அலுவலர் சின்ராஜ் அப்பள்ளியில் நேற்று காலை திடீர் சோதனை செய்தார். அப்போது வகுப் பறையில் ஏராளமான மாணவி களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறுவது உறுதி செய் யப்பட்டது.
அதையடுத்து அரசு உத்தரவை மீறி பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளித் தலைமை ஆசிரியை, ஆசிரி யர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் சின்ராஜ் எச்சரிக்கை விடுத்தார். மேலும் பள்ளிக்கு வந்த மாணவிகளை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படியும் உத்தரவிட்டார். அதையடுத்து சிறப்பு வகுப்பில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவரும் உடனடியாக பள்ளியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.