

லஞ்ச வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருக்க சார்பதிவாளரிடம் ரூ.2.35 லட்சம் லஞ்சம் வாங்கிய முன்னாள் ஊராட்சித் தலைவரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த சார்பதிவாளர் கனகராஜ். இவர் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த அக்டோபர் 16-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.2.40 லட்சத்தை பறிமுதல் செய்து கனகராஜ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கொங்குபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவரும், நிலம் வாங்கி விற்பனை செய்யும் இடைத்தரகருமான அம்மாசி, சார்பதிவாளர் கனகராஜிடம், அவர் மீது சுமத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாகவும், இதனைத் தடுக்க தனது செல்வாக்கை பயன்படுத்தி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி மற்றும் இன்ஸ்பெக்டர் 4 பேருக்கு 15 பவுன் நகை லஞ்சமாக கொடுத்தால், நீதிமன்றத்துக்கு வழக்கு செல்லாமல் தடுத்து விடலாம் எனவும் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து கனகராஜ் 10 பவுன் நகை தர ஒப்புக் கொண்டதுடன், முன்பணமாக 5 பவுன் நகைக்கான ரூ. 2.35 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டு, அம்மாசியை அழகாபுரம் காவல் நிலையம் அருகே வருமாறு தெரிவித்துள்ளார்.
பணம் கொடுக்க விரும்பாத கனகராஜ் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரமவுலி தலைமையிலான போலீஸார் அழகாபுரம் பகுதியில் கனகராஜிடம் இருந்து அம்மாசி லஞ்சமாக ரூ.2.35 லட்சம் பணம் பெற்றபோது, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.