

உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை விளக்கும் வகையில் தூத்துக்குடியில் ‘உடலுறுதி இந்தியா’ விழிப்புணர்வு மிதிவண்டி ஓட்டம் நேற்று காலை நடைபெற்றது. தூத்துக்குடி ரோச் பூங்காவில் மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் தொடங்கி வைத்து பங்கேற்றார். மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜித் சிங் கலோன், மாநகராட்சி பொறியாளர் சேர்மக்கனி, நகர்நல அலுவலர் அருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
தெற்கு கடற்கரை சாலை, துறைமுக புறவழிச்சாலை, தெர்மல் ரவுண்டானா வழியாக துறைமுகம் அருகேயுள்ள முயல்தீவு வரை சென்று, அதே பாதையில் திரும்பி ரோச் பூங்காவிலேயே நிறைவடையும் வகையில் சுமார் 20 கி.மீ., தொலைவுக்கு இந்த விழிப்புணர்வு மிதிவண்டி ஓட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையர் கூறும்போது, “மிதிவண்டி ஓட்டுவது மூலம் காற்று மாசு குறைவதற்கும், சுற்றுப்புற நட்புச் சூழலை உருவாக்கவும், தூய்மையான மற்றும் ஆரோக்கியமான போக்குவரத்து முறையை உருவாக்கவும் முடியும். இந்த மிதிவண்டி ஓட்டம் பொதுமக்கள் தங்களது உடலுறுதியை சுயமதிப்பீடு செய்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது” என்றார் அவர்.