

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரையில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர்.
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் பகல் பத்து உற்சவம் டிச.15 முதல் தொடங்கியது. தினமும் கோயில் உள்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் நேற்று காலை திறக் கப்பட்டது. அப்போது மேளதாளம் முழங்க வர்ணக் குடை, தீவட்டி பரிவாரங்களுடன் காலை 5.15 மணிக்கு கள்ளழகர் எனும் சுந்தரராசப் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து அங்குள்ள சயன மண்டபத்தில் எழுந்தருளினார். சயன மண்டபத் தில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் கோயில் நிர்வாக அதிகாரி அனிதா, தென்மண்டல ஐ.ஜி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கோயிலின் உப கோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்க வாசல் வழியாக சுவாமி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் நேற்று மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. வியூக சுந்தரராஜப் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து அருள்பாலித்தார். மாலை 4.30 மணிக்கு கோயிலில் பக்தர்கள் தரி சனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு சவுந்திரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று காலை 5 மணிக்கு சவுந்திரராஜப் பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வந்தார். அவரைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் சொர்க்கவாசல் வழியாகச் சென்றனர். இதையடுத்து பரமபத மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். நிகழ்ச்சியில் கோயில் தக்கார் அனிதா, செயல் அலுவலர் மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மலையடிவாரத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கப் பெருமாள், பழநியில் உள்ள லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காரைக்குடி
காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் அதிகாலை 5.15 மணிக்கு தேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் சன்னதியிலிருந்து திருவேங்கடமுடையான் சுவாமி எழுந்தருளினார். காலை 6 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற் பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அழகம்மை, செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.