

பூ வியாபாரியைத் தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, திருநெல்வேலி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கிராம மக்கள் குவிந்தனர்.
பாளையங்கோட்டை முருகபெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி மாரியம்மாள், தனது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த மனு:
பாளை.யில் மாரியப்பன் (42) பூக்கடை நடத்தி வருகிறார். கடந்த 20-ம் தேதி தெற்கு பஜாரில் ராஜகோபால சுவாமி கோயிலுக்கு எதிரேயுள்ள அவரது கடைக்கு செல்லும்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பாளையங்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
மாரியப்பனை அரிவாளால் வெட்டியவர்களின் உருவங்கள் அப்பகுதி கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியிருக்கிறது. ஆனாலும், குற்றவாளிகளை போலீஸார் கைது செய்யவில்லை. இந்த வழக்கில் சட்டப்படி குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.