

உத்தரவை மதிக்காத கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்பிக்கு எச்சரிக்கை விடுத்த உயர் நீதிமன் றம், ஜன.4-ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச் சியைச் சேர்ந்த மணி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
அரவக்குறிச்சி தாலுகாவில் இருந்து புகலூர் தாலுகாவுக்கு நிலத்தடி நீரை குழாய் மூலம் கொண்டு செல்ல கரூர் ஆட்சியர் நவ.18-ல் தனி நபருக்கு அனுமதி வழங்கியிருந்தார். இதனால் அரவக்குறிச்சி தாலுகாவில் நிலத் தடி நீர் குறையும். விவசாயமும் பாதிக்கும். தற்போது சாலை களைத் தோண்டி குழாய் பதித்து வருகின்றனர்.
எனவே, ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவரது உத்தரவைச் செயல்படுத்தத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, குடிநீர் குழாய் பதிக்க நீதிபதிகள் தடை விதித்தனர். தடையை மீறி மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் குழாய் பதிக்கும் பணி நடந்து வருவதாக மனுதாரர் தரப்பில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் நேற்று காலை முறையிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் குடிநீர் குழாய் அமைக்க மாவட்ட நிர்வாகம், காவல் துறை எப்படி அனுமதிக்கிறது? கரூர் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஒரு மணி நேரத்தில் காணொலிக் காட்சியில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.
மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆஜராக வில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மதிக்காத கரூர் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அவ்வாறு உத்தரவிட நாங்கள் விரும்பவில்லை, என எச்சரித்தனர்.
பின்னர், நீதிமன்ற உத்தரவை மதிக்காத கரூர் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஜன.4-ல் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.