

``திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரது மீதான ஊழல் வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன. அதை மறைக்கவே, அதிமுக அமைச்சர்கள் மீது ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டுகளை கூறி ஆளுநரிடம் அறிக்கை அளித்துள்ளார்” என முதல்வர் பழனிசாமி நேற்று தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறான, பொய்யான குற்றச்சாட்டுகளை அரசு மீதும், அமைச்சர்கள் மீதும் சுமத்தி, அதனை அறிக்கையாக ஆளுநரிடம் கொடுத்துள்ளார்.
திமுக ஆட்சிக்காலம்போல இப்போது இல்லை. இப்போது எல்லாமே இ-டெண்டர் தான். யார் வேண்டுமானாலும் ஒப்பந்தம் கோரலாம். இதில் தவறு நடக்க வாய்ப்பே கிடையாது. திமுக ஆட்சியில் யாரெல்லாமல் டெண்டர் எடுத்தார்களோ, அவர்கள்தான் இப்போதும் எடுக்கிறார்கள். திமுக ஆட்சியில் ஏராளமான தவறுகள் நடந்துள்ளன. அதற்கு ஆதாரங்கள் உள்ளன.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எஸ்டிமேட் போட்ட தொகை ரூ.200 கோடி. ஆனால், பில் தொகை ரூ.425 கோடி. கிட்டத்தட்ட 130 மடங்கு அதிகம். இதைத்தான் ஊழல் என்று நாங்கள் சொல்கிறோம்.
ஆற்காடு - திருவாரூர் சாலையின் நீளம் 373.36 கிமீ. சாலை சீரமைக்க ஒப்பந்த மதிப்பு ரூ.611.7 கோடி. ஆனால், கொடுத்தது ரூ.773 கோடி. 26.43 சதவீதம் அதிக தொகை கொடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம் - கட்டுமாவடி சாலை நீளம் 117.40 கிமீ. ஒப்பந்த தொகை ரூ.198.77 கோடி. ஆனால் ரூ.271.26 கோடி கொடுத்துள்ளனர். வேலை செய்யச்செய்ய கூடுதலாக 72.49 கோடி அதிகரித்து கொடுத்துள்ளனர். இது 36.47 சதவீதம் அதிகமாகும்.
ராமநாதபுரம் - கட்டுமாவடி வரையான 140.43 கிமீ சாலையை மேம்படுத்த, அசல் ஒப்பந்த தொகை ரூ.141.41 கோடி. ஆனால், கொடுத்தது ரூ.254.80 கோடி. 77.67 சதவீதம் அதிகமாக கொடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் - தூத்துக்குடி சாலை நீளம் 114.67 கிமீ. ஒப்பந்த தொகை ரூ.119.26 கோடி. ஆனால் கொடுத்தது ரூ.203.98 கோடி. 71 சதவீதம் கூடுதல்.
`டெண்டர் எடுக்க வைப்புத்தொகையை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்’ என, உலக வங்கி ஒரு நிபந்தனையை போட்டது. இதன்படிதான் எனது உறவினர் என கூறும் நபர், ஆன்லைன் மூலம் டெண்டர் போட்டுள்ளார். ஆன்லைனிலேயே பணமும் கட்டியுள்ளார். அது எனக்கு மட்டுமல்ல யாருக்கும் தெரியாது. டெண்டர் போட்டவருக்கு மட்டுமே தெரியும். டெண்டரை திறக்கும் போதுதான் இவருக்கு வருகிறது. இதில் எப்படி ஊழல் நடைபெற்றிருக்கும்?
அதில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்று, `இது அரசியலுக்காக போடப்பட்ட வழக்கு’ என, உச்ச நீதிமன்றமே தெரிவித்துவிட்டது. இதுதான் நடந்தது.
திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்களை, உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன. அதனை மறைக்க முன்கூட்டியே அதிமுக அமைச்சர்கள் மீது தவறான புகார்களை கூறி, பொய்யான அறிக்கொயை ஆளுநரிடம் அளித்துள்ளனர். இவ்வாறு முதல்வர் கூறினார்.