

மதுரை அண்ணா நகர் 80 அடி சாலையில் எம்-ஐ சொலுஷன் நிறுவனம் செயல்படுகிறது. இதன் மேலாளர் ராஜ்குமார் நிறுவனத்தின் இருப்பு விவரத்தை கடந்த மார்ச்சில் ஆய்வு செய்தார். அப்போது கடையில் சுமார் 35 ஆப்பிள் ஐ போன் பெட்டிகளில் பழைய மொபைல் போன்களுக்கான பேட்டரிகள் இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சர்வீஸ் பிரிவு ஊழியரான மனோஜ் என்பவர் திருடிச் சென்றதும், அவர் வேலையில் இருந்து நின்றதும் தெரிய வந்தது. திருடு போன மொபைல் போன்களின் மதிப்பு ரூ.21,11,480 எனத் தெரிய வந்தது.
இது குறித்து மேலாளர் ராஜ்குமார் அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஜூன் 27-ல் புகார் அளித்தார்.
அதன்பேரில் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படையினர் விசாரணை நடத்தி வெளியூரில் தலைமறைவாக இருந்துவிட்டு மதுரைக்கு 2 நாட்களுக்கு முன்பு வந்த மனோஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.