

வானில் நேற்று (21-ம் தேதி) ஒரே நேர்கோட்டில் வந்த வியாழன் மற்றும் சனி கோள்களை சேலத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வைக்கப்பட்டிருந்த தொலைநோக்கி மூலம் மக்கள் பார்த்தனர்.
சேலம் இரும்பாலையில் இரண்டு இடங்களில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வைக்கப்பட்டிருந்த தொலைநோக்கி மூலம் பொதுமக்கள் வியாழன், சனி கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவதை கண்டு ரசித்தனர். இந்த இரு கோள்களும் ஒரே நேர்கோட்டில் வந்ததால் இணைந் திருப்பதுபோல தெரிந்தது. இந்நிகழ்வை சேலத்தில் பொது மக்கள் தங்கள் வீட்டு மாடிகளில் இருந்து பார்த்து மகிழ்ந்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயமுருகன் கூறியதாவது:
சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், சனி கோள்கள் நேற்று (21-ம் தேதி) ஒரே நேர்கோட்டில் வருவதை மக்கள் பார்க்க வசதியாக சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம், தாரமங்கலம், நல்லம்பாளையம், இரும்பாலை மற்றும் சேலம் மாநகர பகுதியில் இரண்டு இடங்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தொலைநோக்கி வைக்கப்பட்டிருந்தது. இதில், இந்த நிகழ்வை பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.