

தூத்துக்குடியைச் சேர்ந்த பொன் காந்திமதிநாதன், பரமசிவன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் நீர்நிலைகளை பராமரிக்கவும், பாதுகாக்கவும் குடிமராமத்துத் திட்டம் உருவாக்கப்பட்டது. குடிமராமத்துப் பணிகளை அந்தந்த பகுதி விவசாயிகள் மற்றும் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும். நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தப்படாததால் ஒவ்வொரு மாவட்டத்திலும் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு குடிமராமத்துப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இவ்வாறு அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுக்கள் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து குடிமராமத்துப் பணியில் முறைகேடு செய்து வருகின்றன. ஒரே கண்மாயை குடிமராமத்துத் திட்டம், தாய் திட்டம், அரசாணை 50-ன் கீழ் பராமரிக்கப்பட்டதாகக் கூறி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படவில்லை.
இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு உடனடியாக தேர்தல் நடத்தவும், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் நடைபெற்ற நீர்நிலைகள் பராமரிப்புப் பணி குறித்து சிபிஐ விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் பினேகாஸ் வாதிட்டார்.
பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களுக்குத் தேர்தல் நடத்த நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது. மனு தொடர்பாக தமிழக உள்துறை செயலர், வருவாய்த் துறை செயலர், பொதுப்பணித் துறை செயலர், கனிமவளத் துறை ஆணையர், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். அடுத்த விசாரணையை ஜன. 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.