‘விவசாயிகளின் நண்பன் மோடி’ கலந்துரையாடல் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் உறுதி

தஞ்சாவூரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பேசுகிறார் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங். உடன், மாநிலத் தலைவர் முருகன் உள்ளிட்டோர்.
தஞ்சாவூரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பேசுகிறார் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங். உடன், மாநிலத் தலைவர் முருகன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

புதிய வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் பாஜக சார்பில் ‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழ் மொழியும், பண்பாடும் வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடிய அளவுக்கு பெருமைவாய்ந்தது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் காவிரி நீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்த அறிக்கையை பிரதமர் கவனமாக பரிசீலித்து, ஒவ்வொரு திட்டமாக அறிவித்து வருகிறார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மைதான் கிடைக்கும். எதிர்க்கட்சியினர் பொய் பிரச்சாரத்தால் விவசாயிகளை ஏமாற்றி வருவது துரதிர்ஷ்டவசமானது என்றார்.

முன்னதாக, செய்தியாளர்களிடம் வி.கே.சிங் கூறியதாவது:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது. இச்சட்டத்தால் குறைந்தபட்ச ஆதார விலைக்கோ, ஏற்கெனவே உள்ள மண்டிக்கோ பாதிப்பு ஏற்படாது. இச்சட்டத்தின் மூலம் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படுகிறது. விவசாய நிலங்களுக்கு கிடையாது. இதனால், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும் என்றார்.

கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in