இந்தியாவில் 1947-க்கு பிறகு எத்தனை முறை பண மதிப்பு குறைக்கப்பட்டது? மத்திய நிதி அமைச்சகம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் 1947-க்கு பிறகு  எத்தனை முறை பண மதிப்பு குறைக்கப்பட்டது?  மத்திய நிதி அமைச்சகம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

இந்தியாவில் 1947-க்குப் பிறகு எத்தனை முறை பண மதிப்பு குறைக்கப்பட்டது என்பதை மத்திய நிதி அமைச்சகம் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த அபினேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழக காவல் துறையில் சார்பு ஆய்வாளர் நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு ஜன.12-ல் நடந்தது. முதலில் வெளியான விடைச்சுருக்கத்தின்படி எனக்கு 48.5மதிப்பெண் கிடைத்தது. பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எனக்கு வேலை கிடைத்திருக்கும். இறுதியாக வெளியிடப்பட்ட விடைச் சுருக்கத்தில் 47-வது கேள்விக்கான விடை மாறியிருந்தது. இதனால் அரை மதிப்பெண் குறைந்ததால் எனக்கு வேலை கிடைக்கவில்லை.

கடந்த 1947-க்குப் பிறகு இந்திய நாணயம் எத்தனை முறை மதிப்பு குறைக்கப்பட்டது எனக் கேள்வி கேட்கப்பட்டது. இந்தியாவில் இந்திய நாணயம் 3 முறை மதிப்பு குறைப்பு செய்யப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு 4 முறை செய்யப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பும், மதிப்பு குறைப்பும் வேறு வேறானது.இதனால் அந்த கேள்விக்கு 3 முறை என்பதே சரியான விடை. ஆனால் 4 முறை என பதிலளித்தவர்களுக்கு அரை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. சரியாக விடையளித்த எனக்கு அரை மதிப்பெண் வழங்கி அடுத்தக்கட்ட தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல், ராஜ்குமார் என்பவரும் மனு செய்திருந்தார். இவற்றை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்து, மதிப்பு குறைப்பும், மதிப்பிழப்பும் வேறுவேறு. இதனால் சரியான விடையளித்த பலருக்கு மதிப்பெண் மறுக்கப்பட்டுள்ளது. தவறான விடைகளின் அடிப்படையில் வெளியான இரண்டாவது விடைச் சுருக்கம் செல்லாது என அறிவிக்கப் படுகிறது. மனுதாரர்கள் இருவரும் சரியான விடையளித்துள்ளதால் அவர்களுக்கு தலா அரை மதிப்பெண் வழங்கி அடுத்தக்கட்டத் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி 8 பேர் உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். அதில், தனி நீதிபதியின் உத்தரவால் எங்களுக்கு தலா அரை மதிப்பெண் குறைந்து, வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கில் மத்திய நிதி அமைச்சகத்தை நீதிமன்றமே தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது. இந்தியாவில் 1947-க்குப் பிறகு எத்தனை முறை பண மதிப்பு குறைப்பு செய்யப்பட்டது என்பதை மத்திய நிதி அமைச்சகம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in