

எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் நேற்று முதல்வர் பழனிசாமி திறந்த வேனில் சென்று பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது முதல்வருக்கு அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படாத நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, அவரது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதையொட்டி, சேலம் தொடங்கி நங்கவள்ளி அடுத்த பெரியசோரகை வரை முதல்வரை வரவேற்று அதிமுக-வினர் வரவேற்பு பேனர், அதிமுக கொடிகளை வழிநெடுக வைத்திருந்தனர். ஆங்காங்கே, முதல்வருக்கு, பெண்கள் பூரண கும்ப வரவேற்பு கொடுத்தனர்.
பெரியசோரகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி ஆகியோரது 20 அடி உயர கட்-அவுட்டுகள் உள்ளிட்ட ஏராளமான பேனர்கள் முதல்வரை வாழ்த்தி அதிமுக-வினரால் வைக்கப்பட்டிருந்தன. இதனால், பெரியசோரகை கிராமம் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. இதையொட்டி, சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், கோவை மண்டல ஐஜி பெரியய்யா, சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார், சேலம் எஸ்பி தீபா காணிகர், நாமக்கல் எஸ்பி சக்தி கணேசன் உள்ளிட்டோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
முதல்வர் பயணம் செய்த பிரச்சார வேனின் முகப்பில், மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது உருவப்படம், வேனின் நான்குபுறமும் எல்இடி விளக்குகள், ஒலி பெருக்கிகள், பிரச்சார வேனில் முதல்வர் அமர்ந்து செல்லும்போது, இரவிலும் அவரை மக்கள் பார்க்க வசதியாக, வேனின் உட்புறத்தில் எல்இடி விளக்குகள் ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன. பிரச்சாரம் நடந்த இடங்களில் அதிமுக-வினர் பட்டாசுகளை வெடித்து முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர்.
பெரியசோரகையைத் தொடர்ந்து, வனவாசி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், சாணார்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில், திறந்த வேனில் நின்றபடி பேசிய முதல்வர் பழனிசாமி, “உங்களுக்காக தொடர்ந்து உழைக்க காத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். அதிமுக-வுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தாருங்கள். உங்கள் பொன்னான வாய்ப்புகளை இரட்டை இலை சின்னத்துக்கு அளிக்க வேண்டும்” என்றார்.