அரசு கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் மூலம் கர்நாடக நெல் விற்பனை கொடிவேரி பாசனசபை குற்றச்சாட்டு

அரசு கொள்முதல் நிலையங்களில்  வியாபாரிகள் மூலம் கர்நாடக நெல் விற்பனை கொடிவேரி பாசனசபை குற்றச்சாட்டு
Updated on
1 min read

கர்நாடகாவில் இருந்து கொண்டு வரும் நெல்லினை, கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு நெல் கொள்முதல் மையங்களில் வியாபாரிகள் விற்பனை செய்வதாக பாசனசபை குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன சபை தலைவர் சுபி தளபதி, ஈரோடு ஆட்சியர் சி.கதிரவனிடம் மனு அளித்தார். பின்னர் சுபி தளபதி கூறியதாவது:

கோபி கொடிவேரி அணை பாசனத்துக்கு உட்பட்ட பகுதியில், 17 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு விவசாயிகளைவிட, வியாபாரிகள் அதிகமாக நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். குறிப்பாக, காசிபாளையம், புதுவள்ளியம்பாளையம், ஏழூர் நிலையங்களில் வியாபாரிகள் அதிகம் வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து, நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, கோபிக்கு வந்த லாரி விபத்துக்குள்ளானது. இது வியாபாரிகள் வருகையை உறுதி செய்கிறது. கொடிவேரி பாசன விவசாய சங்கம் தொடர் கண்காணிப்பில் இருந்தும், அதிகாரிகள் உடந்தையாக இருப்பதால், இதுபோன்ற தவறுகளை தடுக்க முடியவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் கொள்முதல் நிலைய அதிகாரிகளை கண்காணிப்பதுடன், தவறுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in