மின் தடை நீக்குதல் உள்ளிட்ட மின்வாரிய களப்பணிகளை தனியாருக்கு விட எதிர்ப்பு உயர் நீதிமன்றத்தில் தொமுச வழக்கு

மின் தடை நீக்குதல் உள்ளிட்ட மின்வாரிய களப்பணிகளை தனியாருக்கு விட எதிர்ப்பு  உயர் நீதிமன்றத்தில் தொமுச வழக்கு
Updated on
1 min read

மின் தடை நீக்குதல் உள்ளிட்ட களப் பணிகளை தனியாருக்கு விட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் அ.சரவணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மின்வாரியத்தில் 50 சதவீதபணியிடங்களை தனியாரிடம் வழங்க மின்வாரியம் உத்தரவுபிறப்பித்துள்ளதை எதிர்த்து,தொமுச சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரவழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக மின்வாரியத்தில் 17000 கள உதவியாளர், 8000-த்துக்கும் மேற்பட்ட கம்பியாளர் உள்பட 48000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை மின்சார வாரியம் வெளியிடாமல், தனியார் வசம் ஒப்படைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்வாரியத்தில் இதற்கு முன்புஅறிவித்த கேங்மேன் பதவி, உதவி மின் பொறியாளர், கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர்,கள உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது மின் தடை சரிசெய்தல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த அறிவிப்பை மின் வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in