

தஞ்சாவூர் அருகே இளைஞர் அமைப்பு ஒன்று, பிறந்தநாள் கொண்டாடும் நபரை மரக்கன்று நட ஊக்குவிப்பது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள் ளது.
தஞ்சாவூர் அருகே கள்ளப்பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், செங்கழுநீர் ஏரி மீட்புக் குழு என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இதில் கள்ளப் பெரம்பூர், சீராளூர், தென்னங்குடி உள்ளிட்ட செங்கழுநீர் ஏரி மூலம் பாசன வசதி பெறும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உறுப்பி னர்களாக உள்ளனர். இவர்கள் ஒன்றிணைந்து, கடந்த 3 ஆண்டுகளாக கிராமந்தோறும் மரக்கன்று, போத்துகளை நடுதல், பனை விதை விதைத்தல், ஏரி சீரமைப்பு போன்ற பணிகளை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக, ஏரி பாசனத்துக் குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு பிறந்தநாள் என்றால், அன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடும் நபரை அழைத்து வந்து, ஒரு மரக்கன்று அல்லது மரப் போத்து நடவைத்து வருகின்றனர். இந்தச் செயல் கிராம மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுதொடர்பாக, அந்த அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கூறியதாவது: எங்கள் ஏரியின் மூலம் 10 கிராம மக்கள் பாசன வசதி பெறுகின்றனர். இங்குள் ளவர்களுக்கு பிறந்தநாள் என்றால், புதிய மரக்கன்றை வழங்கி நட ஊக்குவிக்கிறோம். அவற்றை நடுபவர்களே பராமரித்து வரு கின்றனர்.
இந்த 2 ஆண்டுகளில் ஆலமரம், அரசமரம், புங்கன் மரம் என நூற்றுக்கணக்கான மரக்கன்று, மரப் போத்துகள் நடப்பட்டுள்ளன. இதனால், எங்கள் பகுதியில் மழை அளவு உயர்ந்துள்ளது. வருங்காலத்தில் அனைத்து சுப நிகழ்வுகளிலும் மரக்கன்றுகளை நடுவதற்கு ஊக்கப்படுத்தி வருகிறோம் என்றனர்.