

புதுச்சேரி அரசின் காரைக்கால் மாவட்ட வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, மாதூர் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியவை இணைந்து, கோட்டுச் சேரி பகுதியில் உலக மண்வள நாள் நிகழ்ச்சியை நேற்று முன்தினம் நடத்தின.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட கூடுதல் வேளாண் இயக்குநர் ஜெ.செந்தில் குமார், நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, மண்வள அட்டையின் முக்கியத்துவம், மண் மாதிரியின் அவசியம் குறித்து விளக்கினார். மேலும், வேளாண் துறையின் சார்பில் 95 சதவீத விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ள தாகவும், அதில் பரிந்துரைத்துள்ள அளவில் எரு மற்றும் உரங்களை இட்டு, மண்வளத்தை பேணிக் காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார.ரத்தினசபாபதி பேசியபோது, “மண்ணில் உள்ள பல்லுயிரிகளைப் பாதுகாப்பதன் மூலம் மண்ணை உயிர்த்தன்மையுடன் இருக்கச் செய்வோம். அதற்கு, ஒவ்வொரு சாகுபடியிலும் அங்கக எருக்கள் மற்றும் உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில், காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசி ரியர் கே.குமரவேல், மண்ணியல் பேராசிரியர் ப.பகவதி அம்மாள், வேளாண் அறிவியல் நிலைய உழவியல் பிரிவு தொழில்நுட்ப வல்லுநர் வி.அரவிந்த், பயிர் பாதுகாப்புப் பிரிவு தொழில்நுட்ப வல்லுநர் சு.திவ்யா உள்ளிட்டோர், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், பயிர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனை வரும் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாவட்டம் முழுவதும் இருந்து 75-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். அவர்களின் சந்தேகங்களுக்கு நிகழ்ச்சியில் விளக்கமளிக்கப்பட்டது.