

பெண்ணைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சி, தில்லைநாயகபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெகதீஸ் வரன். இவரது மனைவி உமாபதி(31). ஜெகதீஸ்வரன் வெளியூரில் பணியில் இருந்ததால் உமாபதியும், 2 குழந்தைகளும் தில்லைநாயகபுரத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் உமாபதியின் தந்தைக்குப் பழக்கமான தேவி பட்டினம் அருகே எருமைப்பட்டி சிறுகுடியைச் சேர்ந்த குப்புசாமி மகன் பிரபு (29) என்பவர், கடந்த 29.4.2016 அன்று உமாபதியின் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு வந்தவர் உமாபதியிடம் ரூ. 10,000 கேட்டுள்ளார். உமாபதி தராததால் அவரைக் கொலை செய்தார். இதுதொடர்பாக கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து, பிரபுவைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் நேற்று மாவட்ட விரைவு மகளிர் நீதிபதி சுபத்ரா, பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த இளைஞர் பிரபுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3,000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.