

சேலம் மாவட்டத்தில் செவிலியர் கல்வி பயிலும் பழங்குடியின மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடர்பாக ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று 40 சதவீதம் அதற்குமேல் மதிப்பெண்கள் பெற்றுள்ள பழங்குடியின மாணவியர்களின் மேல்படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மையங்களில் செவிலியர் பட்டயப்படிப்பில் சேர்ந்து தொடர்ந்து 3 ஆண்டுகள் பயில தேவைப்படும் கல்விக்கட்டணம், புத்தகக்கட்டணம், விடுதிக் கட்டணம், சீருடைக் கட்டணம் மற்றும் இதர கட்டண செலவினங் கள் வழங்கப்படுகிறது.
ஒரு மாணவிக்கு ரூ.70,000 அரசே ஏற்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் 2019-2020-ம் ஆண்டு பிளஸ் 2 பொதுதேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள செவிலியர் பட்டயப்படிப்பில் சேர்ந்து பயிலும், பயில விருப்பமுள்ள பழங்குடியின மாணவியர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழங்குடியினர் நலத்திட்ட அலுவலக அறை எண்: 305-ல் தங்களது விருப்பக்கடிதம், சாதிச்சான்று மற்றும் மதிப்பெண் சான்று நகலுடன் வரும் 21-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறம் என தெரிவித்துள்ளார்.