தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பதக்கம் பெற்ற ஈரோடு மாணவர்களுக்கு பாராட்டு விழா

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பதக்கம் பெற்ற ஈரோடு மாணவர்களுக்கு பாராட்டு விழா
Updated on
1 min read

தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேருக்கு ரூ.35.50 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி அமைச்சர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 64-வது தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய சிலம்பம், மேஜைப்பந்து, பூப்பந்து, கடற்கரை கையுந்து பந்து, கேரம், கராத்தே, சதுரங்கம் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 23 வீரர், வீராங்கனைகளுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையினை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் கூறியதாவது:

மாநில அளவில் பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, அரசுத் துறையில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கிராமப்புறங்களில் உள்ள இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு பயிற்சி அளிக்கும்விதமாக ரூ.64 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் 24 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கிராமப்புறங்களிலுள்ள 14 வயதிற்குட்பட்ட குழந்தை களுக்கும் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றனர். விழாவில், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in