

சேலம் மாவட்டத்தில் மழை குறைந்துள்ளதால் பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், சேலம் வஉசி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.
சேலம் வஉசி பூ மார்க்கெட்டுக்கு சேலம் மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகளும் அதிகளவில் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். கடந்த இரு வாரங்களாக மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததால், மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்திருந்தது.
இந்நிலையில், மழை நின்றதால் மார்க்கெட்டுக்கு பூக்கள் அதிகளவில் கொண்டு வரப்படுகிறது. எனினும், மார்கழி மாதம் தொடங்கியதால், முகூர்த்த விற்பனை இன்றி, பூக்களின் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வியாபாரிகள் கூறியதாவது:
மழை குறைந்ததால் பூக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. சேலம் வஉசி மார்க்கெட்டுக்கு நேற்று சாமந்தி 12 டன், சம்பங்கி 5 டன் விற்பனைக்கு வந்தது. வழக்கமாக 500 கிலோ வரும் குண்டுமல்லி 900 கிலோ விற்பனைக்கு வந்தது. மார்கழி மாதம் தொடங்கிவிட்டதால், முகூர்த்தங்கள் இல்லாததால் பூக்களின் விற்பனை குறைந்துள்ளது. தை மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதுவரை பூக்களின் தேவை குறைவாகவே இருக்கும். தேவை குறைவு, உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் பூக்களின் விலை குறைந்துள்ளது.
ஒரு கிலோ ரூ.700-க்கு விற்பனையான குண்டுமல்லி ரூ.400-க்கும், ரூ.600-க்கு விற்னையான சன்ன மல்லி ரூ.500-க்கும் விற்பனையானது. வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படும் அரளி கிலோ ரூ.260-ல் இருந்து, ரூ.350 ஆக விலை உயர்ந்திருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.