

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசால் அறிவிக் கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலம், அரசு மருத்துவக் கல்லூரி, ஜவுளி பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவது எப்போது என்று இம்மாவட்ட மக்கள் காத்தி ருக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ரூ.827 கோடியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக 2007-ம் ஆண்டு தமிழக அரசின் தொழில் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திட்டத்தால் 50,000 பேர் வரை வேலைவாய்ப்பு பெறுவர் என தெரிவிக்கப் பட்டது. நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும், வீட்டு மனையும் வழங்கப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தி 13 ஆண்டுகள் ஆகியும் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இத்திட்டத்துக்காக வேலை வாய்ப்பை எதிர்பார்த்து நிலம் வழங்கிய விவசாயிகள், வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
3.2.2009-ல் அப்போதைய திமுக அரசு பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக் கும் திட்டத்தை அறிவித்தது. 4.2.2010-ல் அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின், ஒதியம் கிராமத்தில் 30.28 ஏக்கர் நிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக் கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு இத்திட் டத்தை கிடப்பில் போட்டது. இல்லாத மருத்துவக் கல்லூரிக்கு தமிழக அரசு இப்போதுவரை டீனை நியமித்து வருகிறது. அண்மையில் உருவான பல மாவட்டங்களில் கூட அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்ற தமிழக முதல்வர், பெரம்பலூர் மாவட்டத்திலும் அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்கின்றனர் மாவட்ட மக்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பதாக 2013-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.
பாடாலூர் அருகே திரு வளக்குறிச்சி கிராமத்தில் இத்திட்டத்துக்காக 110 ஏக் கர் நிலம் ஒதுக்கப்பட்டது. தனியார் தொழில் அதிபர்கள் பலர் இங்கு தொழில் தொடங்க ஆர்வம் காட்டினர்.
இத்திட்டத்துக்காக அரசு தரப்பில் போதிய உள்கட் டமைப்பு வசதிகளை செய்து கொடுக்காததால் இந்த திட்டமும் இதுவரை செயல்பாட்டுக்கு வராம லேயே உள்ளது.
பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில் பொருளாதார மண்டலம், அரசு மருத்துவக் கல்லூரி, ஜவுளிப் பூங்கா ஆகியவை செயல்பாட்டுக்கு வந்தால், இம்மாவட்ட மக்கள் வேலை வாய்ப்பும், தரமான மருத்துவ சிகிச்சையும் பெறுவதுடன், பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் அடைவர். எனவே, சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு கிடப்பில் போடப்பட்ட இத்திட்டங்களை விரைவில் செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என இம்மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.