

புதுக்கோட்டை அக்கரை வட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய திமுக கவுன்சிலர் எஸ்.பட்டம்மாள். உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் பட்டுவிடுதி, நெல்லையடி கொல்லை, தொண்டைமான் புஞ்சை, காட்டாத்தி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்தக் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தக் கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார்.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், பட்டுவிடுதி, கட்டாத்தி, நெல்லையடிக் கொல்லை கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேளாண் இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார் என்றார்.
இதையடுத்து,3 கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க 2 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.