புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர், கும்பகோணத்தில் குறைதீர் கூட்டங்களிலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர், கும்பகோணத்தில்  குறைதீர் கூட்டங்களிலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு
Updated on
1 min read

தஞ்சாவூர், கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலங்களில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் இருந்து, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் எம்.வேலுமணி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயத் தொழிலாளர் சங்க துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார், தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைச் செயலாளர் திருப்பூந்துருத்தி பி.சுகுமாரன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ராமசாமி உள்ளிட்ட விவசாயிகள், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தியும், இச்சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

10 நிமிடங்களுக்குப் பின்னர், அவர்கள் மீண்டும் கூட்டத்தில் கலந்துகொண்டு, தங்களின் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

அப்போது, அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நிகழாண்டு பருவத்துக்கான அரைவைப் பணியை விரைவில் தொடங்க வேண்டும். ‘புரெவி' புயல் காரணமாக ஒரத்தநாடு பகுதியில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்.

பயிர்க் காப்பீடு தொடர்பாக, பாதிப்பு விவரங்களைக் கணக்கெடுக்கும்போது, வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். கணக்கெடுப்பின்போது, அந்தந்த கிராம விவசாயிகளுக்கு தண்டோரா அல்லது ஒலிப்பெருக்கி மூலம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதேபோல, கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் விஜயன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், விவசாய சங்க பிரதிநிதிகள் சுந்தரவிமல்நாதன், முருகேசன், திருநீலக்குடி பாஸ்கர் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், விவசாயிகளிடமிருந்து 18 மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவைத்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியபோது, ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர் வார வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதைக் கண்டித்தும், தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுந்தரவிமல்நாதன் தலைமையில், 25 விவசாயிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in