

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.வைத்தியசுப்ரமணியம் தெரிவித்துள்ளது:
தற்போது நிறைவடைந்துள்ள 2020-21-ம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வை கண்காணிப்பு முறையில் தொலைநிலையில் நடத்த சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கல்வி அலுவல் குழு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, சாஸ்த்ரா - டிசிஎஸ் மையங்களுடன் இணைந்து இம்முறையிலான தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. நாடெங்கிலும் 130 மாவட்டங்களிலுள்ள இம்மையங்கள் மூலம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படும்.
மாணவர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள மையங்களில் தேர்வு எழுதலாம். வினாத்தாள்கள் பாதுகாப்பான வகையில் இணையவழி மூலம் குறித்த நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும். மையங்களில் வழங்கப்படும் விடைத்தாளில் மாணவர்கள் தேர்வு எழுதி ஒப்படைக்க வேண்டும். பின்னர், அவை பல்கலைக்கழகத்துக்கு திருத்துவதற்காக அனுப்பி வைக்கப்படும். இந்த பொதுமுடக்க காலத்தில் டிசிஎஸ் உடன் ஒரு பல்கலைக்கழகம் இணைவது நாட்டிலேயே முதன்முறையாகும். இந்த தேர்வுகளில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு இக்கல்வியாண்டின் இறுதியில் பல்கலைக்கழக வளாகத்திலேயே தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.