

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் பாமக-வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஈடுபட்டனர்.
சேலம் பெரியபுதூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பாமக மாநில துணை பொதுச் செயலாளர் அருள் தலைமையிலும், செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் பகுதியில் மாநகர மாவட்ட செயலாளர் கதிர் ராசரத்தினம் தலைமையிலும், நரசோதிப்பட்டியில் பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில இணை பொதுச் செயலாளர் சத்திரிய சேகர் தலைமையிலும் அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கினர்.
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலும் பாமக-வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 363 கிராம நிர்வாக அலுவலகங்களில், அப்பகுதிகளைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர். ஈரோடு கனி ராவுத்தர் குளம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் பாமக முன்னாள் மாநில துணைப் பொதுச்செயலாளர் பொ.வை. ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். அறச்சலூரில் நடந்த போராட்டத்தில் பாமக மாநில துணைத்தலைவர் வடிவேல் ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருச்செங்கோடு அருகே மாமுண்டி அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக துணைச் செயலாளர் மா.மாணிக்கம் தலைமை வகித்தார். பின்னர் மனுவை கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கினர். இதுபோல் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 356 கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. கிட்டம்பட்டி, அகசிப்பள்ளி, போகனப்பள்ளி, புலியரசி, பந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி விஏஓ அலுவலகங்கள் முன்பு நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பாமக மாநில துணை பொதுசெயலாளர் வழக்கறிஞர் இளங்கோ தலைமை வகித்தார். கம்மம்பள்ளி விஏஓ அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக ஒன்றிய செயலாளர் சென்றாயப்பன் தலைமை வகித்தார்.
காட்டிநாயனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாராயணக்குமார் தலைமை வகித்தார்.
வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு பாமக சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் ஒட்டப்பட்டி உட்பட தருமபுரி மாவட்டத்தின் கிராம நிர்வாக அலுவலகங்களில் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.