

அச்சன்கோவில் திரு ஆபரணப் பெட்டி வரவேற்பு கமிட்டி தலைவர் ஹரிகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஆராட்டு திருவிழா நடைபெறும். இதை முன்னிட்டு ஐயப்ப சுவாமியின் திருஆபரணபெட்டி ஊர்வலம் நடைபெறும். கொடியேற்ற தினமான மார்கழி 1-ம் தேதிக்கு முன்தினம் புனலூர் கிருஷ்ணன் கோயிலில் உள்ள அரசு பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து திருஆபரண பெட்டி எடுத்து வரப்பட்டு, பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கேரள போலீஸ் பாதுகாப்புடன் ஆரியங்காவு வழியாக தமிழகம் கொண்டுவரப்படும்.
பின்னர் தமிழக மற்றும் கேரள போலீஸ் பாதுகாப்புடன் புளியரை, செங்கோட்டை வழியாக தென்காசி வரை ஆபரணபெட்டி வாகனம் வந்து, பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவில் சென்றடையும். அன்றைய தினமே திருஆபரணம் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு ராஐ அலங்காரத்தில் அருள்பாலிப்பார். பின் மறுநாள் காலை கொடியேற்றப்பட்டு திருவிழா ஆரம்பமாகும்.
9-ம் நாள் திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாள் சுவாமி ஆராட்டுடன் திருவிழா நிறைவடையும்.
கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு திருவிதாங்கூர் தேவஸம் போர்டு ஆலோசனையின்பேரில் திருஆபரணபெட்டி ஊர்வலம், தேரோட்டம் உள்ளிட்ட அனைத்து திருவிழா நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு, கோயிலுக்குள் நடைபெற வேண்டிய சிறப்பு பூஜைகள் மட்டும் நடைபெறும். எனவே, இந்த ஆண்டு திருஆபரணபெட்டி தென்காசி உள்ளிட்ட தமிழக பகுதிக்கு வராது. பத்தாம் நாள் ஆராட்டும், 11-வது நாள் மண்டல பூஜையும் நடைபெறும். மாலை அணிந்த பக்தர்கள் இ- பாஸ் எடுத்து வந்து தரிசிக்கலாம்.