

குடும்ப உறவை பேணிக் காக்க விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை வகித்து பேசியதாவது:
மக்கள் நீதிமன்றத்தில் காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப பிரச்சினைகள், தொழிலாளர்கள் நலன் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.
குறிப்பாக பாகப்பிரிவினை வழக்குகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் சகோதரர் களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால், அது அவர்களுடன் நின்று விடாமல், அவர்களின் குழந்தைகளையும் பாதிக்கிறது. எனவே, சொத்து தொடர்பான வழக்குகளில் சகோதரர்கள் விட்டுக் கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பாக வாழ முடியும். இதனால், குடும்ப உறவு பேணி காக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சேலம் மக்கள் நீதிமன்றத்தில் 10 பெஞ்சுகளும், தாலுகா அளவில் 8 பெஞ்சுகள் அமைக்கப்பட்டு 3,358 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.