

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் இதுவரை 36 ஆயிரத்து 886 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட பீமாண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் குந்தாரப்பள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளும் பணிகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் கூறியதாவது:
01.01.2021-ம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்-2021 இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி நவம்பர் 16-ம் தேதி முதல் வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இம்முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மேற்கொள்ளும்பணிகள் நடைபெறுகிறது. அதன்படி இதுவரை ஊத்தங்கரை தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளில் 5730 மனுக்களும், பர்கூரில் 5712 மனுக்களும், கிருஷ்ணகிரியில் 6872 மனுக்களும், வேப்பனப் பள்ளியில் 5158 மனுக்களும், ஓசூரில் 8971 மனுக்களும், தளியில் 4443 மனுக்களும் பெறப்பட்டுள்ளன. 6 சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் 36 ஆயிரத்து 886 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு ஆட்சியர் கூறினார்.