

வீடூர் அணையிலிருந்து பாசனத் திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து தமிழகம், புதுச்சேரி விவசாயிகளின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை `புரெவி' புயல் காரணமாக கடந்த 5-ம் தேதி அதன் முழு கொள்ளளவான 32 அடியை எட்டியது. நீர் வரத்திற்கு ஏற்ப உபரி நீரை அதிகாரிகள் தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்துஆலோசனைக் கூட்டம் வீடூர் அணையில் நேற்று நடந்தது. பொதுப்பணித்துறையின் விழுப்புரம் உதவி செயற்பொறியாளர் சுமதி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், "வீடூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வகையில் சங்கராபரணி ஆற்றில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். பாசன வாய்க்காலில் சில இடங்களில் உள்ள முட்புதர்களை நீக்க வேண்டும்.
பாசனத்திற்கு ஜனவரி 8-ம் தேதி அணையை திறக்க வேண்டும்" என்று தெரிவித்தனர். பாசனத்திற்காக ஜனவரி 8-ம் தேதி தண்ணீர் திறப்பது என்ற முடிவை தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறையினர் அறிக்கை அனுப்ப முடிவு செய்தனர்.
இக்கூட்டத்தில் பொதுப்பணித் துறையின் விழுப்புரம் உதவி பொறியாளர்கள் ஞானசேகரன், அய்யப்பன், கனகராஜ், கார்த்திக், புதுச்சேரி பொதுப்பணித் துறை(நீர்பாசனம்) உதவி பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், பாவாடை. வீடூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, புதுச்சேரி மாநில பாசன சங்க பிரதிநிதிகள் செந்தில்குமார், ராஜேந்திரன், பூபதி ,செங்குளத்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.