

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள தோட்டக்கலை பயிர்களை தமிழக தோட்டக்கலைத்துறை கூடுதல் இயக்குநர் தமிழ்வேந்தன் நேற்று நேரில் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் விளாத்திகுளம், புதூர் வட்டாரங்களில் வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களும், தூத்துக்குடி வட்டாரத்தில் வாழைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சேதமடைந்த பயிர்களை தமிழக தோட்டக்கலைத்துறை கூடுதல் இயக்குநர் தமிழ்வேந்தன் நேற்று நேரில் பார்வையிட்டார். பாதிப்பு குறித்து அவரிடம் விவசாயிகள் எடுத்துக் கூறினர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விளாத்திகுளம், புதூர் வட்டார பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி ஆகியவை சேதம் அடைந்துள்ளன. தூத்துக்குடி வட்டாரம் முள்ளக்காடு, அத்திரமரப்பட்டி கோரம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை பயிர்கள் மழை நீர் தேங்கியதால் சேதமடைந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்ப கட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி புரெவி புயலின் போது ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 1,226 ஹெக்டேர் பரப்பளவுக்கு தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து, கிராமங்கள்தோறும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த் துறையினர் இணைந்து கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கணக்கெடுப்பு பணிகள் ஆரம்ப நிலையில் உள்ளன. முழுமையாக முடிந்த பின்னரே பாதிப்புகுறித்து சரியாகத் தெரியும். கணக்கெடுப்பு பணி இன்னும் 4 முதல் 5 நாட்களில் முடிவடையும் என்றார். தோட்டக்கலை துறை துணை இயக்குநர் சரஸ்வதி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.