வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம் தூத்துக்குடியில் குப்பை வண்டிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க  இன்றும், நாளையும் சிறப்பு முகாம் தூத்துக்குடியில் குப்பை வண்டிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக 1,603 வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் (டிச. 12, 13) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 16-ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் பணி அன்று முதல் வரும் 20.01.2021 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம், திருத்தம் போன்றவைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்காக இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் இன்றும்,நாளையும் (டிச. 12, 13) மாவட்டத்தில் உள்ள 1,603 வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது. இதன் பொருட்டு 1,603 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 871 நியமனஅலுவலர்கள், 159 மேற்பார்வையாளர்களும், 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு துணை ஆட்சியர் நிலையிலான சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறப்பு முகாம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் குப்பை வண்டிகள் மூலம் பிரச்சாரம் செய்யும் பணியை மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் நேற்று காலை தொடங்கி வைத்தார். குப்பை வண்டிகள் மாநகரில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் வீடு வீடாகச் செல்வதன் மூலம் சிறப்பு முகாம் குறித்த தகவல் மக்களை எளிதில் சென்றடையும் என்பதால் இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுபோல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in