

மானியத்தையும் வங்கிக் கடனாகத் திருப்பிச் செலுத்தக் கூறிய வங்கி மேலாளரை கைது செய்து ஆஜர்படுத்த ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் அருகேயுள்ள முதுனாள் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராதாகிருஷ்ணன் (57). இவர் 2017-ல் ராமநாதபுரம் சாலைத் தெரு பாரத ஸ்டேட் வங்கியில் உரம் தயாரிக்க ரூ.4 லட்சம் கடன் பெற்றார். அதில் ரூ.1.20 லட்சம் மானியமாகும்.
ராதாகிருஷ்ணன் கடனைச் செலுத்தியபோது மானியத்தையும் கடனாக குறிப்பிட்டு அதையும் கட்டவேண்டும் என வங்கி கூறியது. ஆனால், அவர் மறுத்து விட்டார்.
இது குறித்து மக்கள் நீதி மன்றத்தில் வங்கி தரப்பில் முறை யிடப்பட்டது. விசாரணை யில், மானியத்தைத் தவிர்த்து கடனை மட்டும் வசூலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ராதாகிருஷ்ணன் கடனைச் செலுத்திவிட்டு நிலப்பத்திரத்தைக் கேட்டபோது மானியத்தையும் கடனாகச் செலுத்தினால்தான் பத்திரம் வழங்கப்படும் என வங்கி மேலாளர் தெரிவித்தார்.
பின்னர் ராமநாதபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில், வங்கி தரப்பை பலமுறை ஆஜராக உத்தரவிட்டும் ஆஜராகவில்லை. இதையடுத்து வங்கி மேலாளரைக் கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது.