தஞ்சையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கல்
தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தலைமை வகித்து பேசிய தாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 25 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி, தற்போது நீர் வடிந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. விரைவில், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். இந்த மாதம் இறுதி வரை மழை பெய்யும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், தஞ்சாவூர் வட்டத்தில் மழையால் உயிரிழந்த ஒருவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.4 லட்சம், 3 கால்நடைகள் உயிரிழப்புக்கு இழப்பீடாக ரூ.85 ஆயிரம் மற்றும் சேதமடைந்த 234 வீடுகளுக்கு இழப்பீடாக ரூ.10,48,600 ஆகியவற்றை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்தி லிங்கம் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி பரசுராமன், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் காந்தி, மோகன், துரை.வீரணன், முன்னாள் மேயர் சாவித்ரி கோபால், கோட்டாட்சியர் வேலுமணி, வட்டாட்சியர் வெங்கடேஷ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
