

சேலம் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளில் இறந்தவர்கள் மற்றும் இடமாறுதலாகி சென்றவர்கள் உள்ளிட்ட 22,236 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன், சேலம் ஆட்சியர் ராமனை சந்தித்து மனு அளித்தார். பின்னர் ராஜேந்திரன் கூறியதாவது:
சேலம் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளில் உயிரிழந்த, இடமாறுதலாகி சென்றவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்காமல் உள்ளது.
இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் பலரது பெயர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ளது. இந்த நான்கு தொகுதிகளில் 13,608 பேர் உயிரிழந்துள்ளனர். 6,562 பேர் இடமாறுதலாகி சென்றுள்ளனர். 2006 பேர் இரு தொகுதிகளில் பெயர் பதிவானவர்கள் என மொத்தம் 22,236 பேர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.
இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராமன், உரிய விசாரணை செய்து, பெயர்களை நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, மாநகர செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர். படம்: எஸ். குரு பிரசாத்