குடந்தை அரசு மருத்துவமனையில் சி.டி, எம்ஆர்ஐ ஸ்கேன் வசதிகள் உயர் நீதிமன்றம் உத்தரவு

குடந்தை அரசு மருத்துவமனையில்  சி.டி, எம்ஆர்ஐ ஸ்கேன் வசதிகள் உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு, சுற்றியுள்ள 150 கிராமத்தினர் சிகிச்சைக்கு வந்துசெல்கின்றனர். இங்கு இதயவியல், நரம்பியல், எலும்பியல் பிரிவுகளில் மருத்துவர்கள் இல்லை. இப்பிரிவில் அவசர சிகிச்சை தேவைப்படுவோர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தஞ்சாவூருக்குச் செல்ல ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும் என்பதால், பலர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியில்லை. இதனால், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தனியார் ஸ்கேன் மையங்களில் அதிக பணம் கொடுத்து ஸ்கேன் எடுக்க வேண்டி உள்ளது.

எனவே, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இதயவியல், நரம்பியல், எலும்பியல் மருத்துவர்களை நியமிக்கவும், சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 42 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் மனுவைப் பரிசீலித்து உடனடியாக இதயவியல், நரம்பியல், எலும்பியல் மருத்துவர்களை நியமிக்கவும், சி.டி, எம்.ஆர்.ஐஸ்கேன் வசதியை ஏற்படுத்தவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in