வசூலித்த வட்டிக்கு வட்டி தொகையை வங்கிகள் திரும்ப அளிப்பதை உறுதிப்படுத்த வலியுறுத்தல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துகண்ணன் வெளியிட்ட அறிக்கையில், "கரோனா பொதுமுடக்க காலத்தில்சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் பாதிப்பை சந்தித்தன. இதையடுத்து, வங்கிகளில் பெறப்பட்ட கடன், வட்டிகளை தள்ளுபடி செய்வதற்கு மாறாக, கடன்களை செலுத்துவதற்கு கால அவகாசம் மட்டும் மத்திய அரசு வழங்கியது. இதனால் வங்கிகள், நிதி நிறுவனங்கள், நுண்கடன் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை அரசின்அறிவிப்பை பொருட்படுத்தாமல் வட்டி செலுத்தாதவர்களிடம் வங்கி கணக்கில் இருந்து பணத்தைபிடித்தமும் செய்தன. வட்டிக்கு வட்டி, அபராத வட்டியும் வசூலித்தனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர்.கடந்த 27-ம் தேதி இப்பிரச்சினையில் நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல், உத்தரவை பிறப்பித்துள் ளது. வழக்கின்போது, 13 கோடியே20 லட்சம் பேரின் வங்கி கணக்குகளுக்கு வட்டிக்கு வட்டியாக வசூலிக்கப்பட்ட ரூ.4,300 கோடியை திரும்ப செலுத்தியிருப்பதாக மத்தியஅரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள் ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கெனவே வட்டிக்கு வட்டியாக வசூலிக்கப்பட்ட தொகையை, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மீண்டும் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளில் மத்திய அரசு செலுத்த வேண்டும். வங்கிகள் இத்தொகையை பாதிக்கப்பட்டவர்கள் கணக்கில் செலுத்துவதை மாவட்டநிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
