

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்த வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி தென் மாவட்டங் களில் கடையடைப்பு, சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன. இதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே திமுக மாவட்டச் செய லாளர்கள் பொன் முத்துராமலிங்கம், கோ.தளபதி, ஆகியோர் தலைமையில் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாண்டி பஜாரில் மார்க்சிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலாளர் ரா.விஜயராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
புறநகரில் மேலூர், சோழவந்தான், விக்கிரமங்கலம், அலங்காநல்லூர், உசிலம்பட்டி, திருமங்கலம், கள்ளிக்குடி, ஊமச்சிகுளம், நாகமலை புதுக்கோட்டை, ஒத்தக்கடை உள்ளிட்ட 15 இடங்களில் மறியல் நடைபெற்றது. இதில் 420 பெண்கள் உட்பட 1100 பேர் கைது செய்யப்பட்டனர். மாநகரில் 100 பேர் உள்பட மொத்தம் 1172 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் வியாபாரிகள் கடையடைப்பு செய்து விவசாயிகளுக்கு முழு ஆதரவு தெரிவித்தனர். பல உணவகங்கள், பலசரக்குக் கடைகள் மூடப்பட்டிருந்தன. நகர் முழுவதும் வியாபாரிகள் பரவலாக கடைகளை அடைத்திருந்தனர்.
சிவகங்கை
இதுதவிர காரைக்குடி , மானாமதுரை, காளையார் கோவில் உட்பட மாவட்டம் முழுவதும் 16 இடங்களில் மறியல் நடந்தது. இதில் 1,940 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல், தேனியில் தள்ளுமுள்ளு
திண்டுக்கல் பேருந்துநிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் 20-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். ஒட்டன்சத்திரத்தில் அர.சக்கரபாணி எம்எல்ஏ, பழநியில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ.,நத்தத்தில் ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ., ஆகியோரது தலைமையில் மறியலில் ஈடுபட்டு அக்கட்சியினர் கைதாகினர். மாவட்டத்தில் 32 இடங்களில் நடந்த மறியலில் 160 பெண்கள் உட்பட 2000 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, ஆண்டிபட்டி, கூடலூர், பெரியகுளம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பல இடங்களிலும் ஆட்டோக்கள் இயங்கவில்லை. மாவட்டத்தில் 8 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், பெரியகுளம் முன்னாள் எம்எல்ஏ எல்.மூக்கையா, மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் எல்.ஆர்.சங்கரசுப்பு, டி.கண்ணன், விசிக மாவட்டச் செயலர் ப.நாகரத்தினம், இந்திய கம்யூ. நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி உட்பட 382 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி பள்ளிவாசல் அருகில் இருந்து பேரணியாகப் புறப்பட்ட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர்
இதேபோன்று வில்லிபுத்தூர், திருத்தங்கல், சாத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆலங்குளம், வத்திராயிருப்பு, கீழராஜகுலராமன், திருச்சுழி உள்ளிட்ட 14 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 262 பெண்கள் உட்பட 893 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்
பரமக்குடியில் மட்டும் 48 பெண்கள் உள்ளிட்ட 86 பேர் கைது செய்யப்பட்டனர். கமுதியில் திமுக மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரத்தில் முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் காசிநாததுரை, இந்திய கம்யூ. மாவட்டச் செயலர் முருகபூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுதவிர, ராமேசுவரம், தங்கச்சிமடத்திலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ரயில்வே தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
எஸ்ஆர்எம்யு ஓடும் தொழிலாளர் பிரிவு கோட்டச் செயலாளர் அழகுராஜா, கோட்டத் தலைவர் ரவிசங்கர், உதவி கோட்டச் செயலாளர்கள் சீதாராமன், சபரிவாசன், செந்தில், ஜூலியன், ஜெயராமன், ஜோதி, கிளைச் செய லாளர்கள் சீனிவாசன், முருகேசன், பாலசுப்பிரமணியன், திலக் உட்பட 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.