

ராமநாதபுரம் நிதி நிறுவன மோசடி வழக்கில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த சஞ்சீவிகுமார், உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
ராமநாதபுரத்தில் நிதி நிறு வனம் நடத்தி பலரை ஏமாற்றியதாக நீதிமணி, ஆனந்த் உட்பட மூன்று பேர் மீதான வழக்கை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் தற்போது விசாரிக் கின்றனர்.
இந்த வழக்கை ராமநாதபுரம் போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை. எனவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி விசாரித்தனர்.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.
சிபிஐ தரப்பில், அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினால் வேலைப்பளு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ராமநாதபுரம் நிதிநிறுவன மோசடி வழக்கில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் விசாணையை விரைவில் முடித்து நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.